தினம் ஒரு திருமந்திரம்

பாடல் 41: பாயிரம் - 1. கடவுள் வாழ்த்து

சினம்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்
புனம்செய்த நெஞ்சிடைப் போற்றவல் லார்க்குக்
கனம்செய்த வாள்நுதல் பாகனும் அங்கே
இனம்செய்த மான்போல் இணங்கிநின் றானே.

விளக்கம்:

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து சீறிக்கொண்டு எழுந்த ஆலகால விஷம் யாரையும் தீண்டாதவாறு தாமே அருந்தி அனைவரையும் காத்தருளிய தேவர்களின் தலைவனும் அந்த விஷம் உள்ளே இறங்கிவிடாமல் கழுத்திலேயே தடுத்து வைத்த பேரொளி வீசும் நெற்றியைக் கொண்ட உமையம்மையாரைத் தன் உடலின் சரி பாதியாகக் கொண்ட சிவபெருமானை தமது குறைகளையும் தாண்டிய உறுதியோடு நெறி வழியில் சென்று இறைவனைத் தம் நெஞ்சத்தினுள்ளே வைத்துப் பூஜிக்கக்கூடியவர்களுடன் பெண் மானைச் சேர்ந்த ஆண் மான் போல எப்போதும் பிரியாது இணைந்து நிற்கின்றான்.

உள் விளக்கம்:

உண்மையான பொருளான இறைவனை அடையும் ஆசையில், அவனை நெஞ்சத்தில் வைத்துப் போற்றிப் புகழ்ந்து வரும் அடியவர்களின் நெஞ்சத்திலிருந்து, ஆணவம், அகங்காரம், ஆத்திரம் முதலிய விஷங்கள் அவர்களைப் பாதிக்காதவாறு தாமே எடுத்துக்கொண்டு, அவர்களைச் சூழ்ந்துகொண்டு இறைவனை அடையவிடாமல் தடுக்கும் கர்மங்களை அவர்களின் வழியில் குறுக்கிடாதவாறு தடுத்து நிறுத்திவிட்டு, அவர்கள் செல்லும் நேர்வழிப் பாதையில் அவர்களோடு இணைந்து ஒன்றாக நடந்து வந்து, அவர்களைக் காத்தருள்வான் சதாசிவமூர்த்தி.

Popular posts from this blog

TNPSC TEST BATCH

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS