தினம் ஒரு திருமந்திரம்

பாடல் 23: பாயிரம் - 1. கடவுள் வாழ்த்து

வல்லவன் வன்னிக் கிறையிடை வாரணம்
நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை
இல்லென வேண்டா இறையவர் தம்முதல்
அல்லும் பகலும் அருளுகின் றானே.

விளக்கம்:

சர்வ வல்லமை படைத்தவனும் அக்கினிக்குத் தலைவனானவனும் காட்டு யானைத் தோலை ஆடையாகப் போர்த்தியவனும் மும்மலங்கள் தனது அடியவர்களைப் பாதிக்காது நில் என்று கட்டளையிட்டவனும் அனைத்து உயிர்களுக்கும் சரிசமமாக நீதியை வழங்குபவனுமாகிய எம்பெருமான் இறைவனை அறியாமையால் இல்லை என்று கூறாதீர்கள். வானத்து தேவர்கள் முதல் அனைத்து உயிர்களுக்கும் இரவும் பகலும் இடையறாது அருளை வழங்கி நிற்கின்றான் இறைவன்.

உள் விளக்கம்:

இறைவன் சர்வ வல்லமை படைத்தவன். குண்டலினி அக்கினி, உணவை செரிக்கச் செய்யும் ஜடராக்கினி, கடல் நீரை கரை தாண்டாமல் வைத்திருக்கும் படபாக்கினி, உலகின் தட்பவெப்பத்தைக் கட்டுப்படுத்தும் பூமியின் மைய அக்கினி, எரிமலைக் குழம்பாக வெடித்துவரும் அக்கினி முதலாகிய அனைத்து அக்கினிகளுக்கும் இறைவன் தலைவன். உயிர்களின் உடலில் குண்டலினி அக்கினி இருக்கும் மூலாதாரத்தில்தான் அவர்களின் நல்கர்மாக்கள் இருக்கின்றன. அவற்றை மேலெழும்பவிடாமல் மும்மலங்களாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகியவை யானை போன்ற கனத்துடன் தடுத்துக்கொண்டு எளிதில் அசைக்க முடியாமல் இருக்கின்றன. பிறவியை விட்டு நீங்கி இறைவனை அடையவேண்டும் என்ற உண்மையான பக்தியோடு இறைவனை வணங்கும் அடியவர்களின் முக்திக்கு உதவும் நல்கர்மாக்களை மேலெழுப்ப யானை போன்ற மும்மலங்களை இறைவன் தனது இடையில் ஆடையாக அணிந்துகொண்டு அவை தம் அடியவர்களின் முத்தியடையும் வழியைத் தடுக்காது நில்லுங்கள் என்று கட்டளையிட்டு தம் அடியவர்களை பிறவிப் பிணியிலிருந்து காப்பாற்றுகின்றவன் இறைவன். அனைத்திற்கும் நீதியாகவும் மாபெரும் கருணையாளனாகவும் இருக்கும் இறைவனை அறியாமையால் உணராதிருந்து அவனை இல்லை என்று கூறவேண்டாம். அவன் இரவும் பகலும் எப்போதும் தம்மை நாடிவரும் உயிர்களுக்கு அருளை இடைவிடாமல் அருளிக்கொண்டேதான் இருக்கின்றான்.

Popular posts from this blog

TNPSC TEST BATCH

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS